சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 1967-ம் ஆண்டில் சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அன்றுமுதல் இரு நாடுகளுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது.
தற்போது சிரியாவில் பெரும் பகுதியை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு சிரியா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் போர் விமானங்களும் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் 2 இடங்களில் நேற்றுமுன்தினம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படவில்லை. சிரியா ராணுவத்தின் ஆராய்ச்சி கூடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலின் அத்துமீறலை ஐ.நா. சபை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிரியா அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.