ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்ட எபோலா வைரஸ், அடுத்ததாக ஐரோப்பாவில் தடம்பதித்துள்ளது. எபோலாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு வந்த பெண் மருத்துவ ஊழியர் ஒருவருக்கு, எபோலா நோய்தொற்று இருப்பதை நேற்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்படும் இரண்டாவது எபோலா நோயாளியான அந்தப் பெண், சியாரா லியோனில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.
நோய்க்கான அறிகுறி தென்பட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டதால், மற்றவர்களுக்கு பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னதாக ஆப்பிரிக்காவில் எபோலா தடுப்பு பணியை மேற்கொண்டுவிட்டு பிரிட்டன் திரும்பிய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு எபோலா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.