மின்னஞ்சல்கள் வந்துள்ளதா என அடிக்கடி பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக உளவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் கோஸ்டாடின் குஸ்லேவ் இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளார்.
மாணவர்கள், நிதி ஆலோசகர்கள், மருத்துவத்துறை நிபுணர்கள் என 124 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தினமும் 3 முறை மின்னஞ்சல்களைத் திறந்து பார்க்க அறிவுறுத்தப்பட்டது. மற்றவர்கள் வழக்கமாக மின்னஞ்சல்களைப் பார்ப்பதையே தொடர அறிவுறுத்தப்பட்டனர்.
அவர்களிடம், தினமும் மன அழுத்தத்தின் அளவு மற்றும் இதர கேள்விகள் கேட்கப்பட்டன. ஆய்வு முடிவில் தினமும் மின்னஞ்சல்களை அதிகம் முறை பார்ப்பவர்கள் அதிகம் மன அழுத்தத்துக்கு ஆளாவது தெரிய வந்துள்ளது. அடிக்கடி மின்னஞ்சலைப் பார்க்கும் வழக்கத்தை குறைப்பது எளிது என்பதால், மன அழுத்தத்தைத் தவிர்க்க, மின்னஞ்சலைக் குறைந்த அளவு பார்ப்பது சிறந்த தீர்வாக அமையும் எனத் தெரியவந்துள்ளது.