தெற்கு மற்றும் மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகள் பலத்த நிலநடுக்கம் காரணமாக குலுங்கின. மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்தாலும் சேதம் எதுவும் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.
பூமிக்கு அடியில் 38 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
ஸாம்போங்கா நகருக்கு வடகிழக்கே 205 கிமீ தூரத்தில் இதன் மையம் இருந்தது. மேலும் ஆழமான பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாலும், நகரங்கள் பூகம்ப மையத்திற்கு வெகுதொலைவில் இருப்பதாலும் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸாம்போங்காவில் உள்ள கத்தோலிக்கத் திருக்கோயிலில் பிரார்த்தனையில் மக்கள் ஈடுபட்டிருந்த போது பூமி ஆட்டம் கண்டுள்ளது.
இந்தோனேசியா போலவே பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டமும் "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் சிக்கியுள்ளது. இவ்வாறாக அழைக்கப்படும் பகுதியில் எரிமலை வெடிப்புகளும் அதன் விளைவாக நிலநடுக்கங்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.