மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு சட்டத்தில் அவர் 3 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 11 தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், தாஜ்மஹால் நட்சத்திர ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 154 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய 10 தீவிர வாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார். இந்த வழக்கில் 2012 நவம்பர் 21-ல் கசாபுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது.
கசாப் அளித்த வாக்குமூலம் மற்றும் இந்திய புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் செயல் தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி செயல்பட்டிருப்பது தெரியவந்தது. அவர் உட்பட சில தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரியது.
ஆனால் அவர்களை ஒப்படைக்க மறுத்துவிட்ட பாகிஸ்தான் அரசு, லக்வி மற்றும் 6 தீவிரவாதிகளை கைது செய்தது. அவர்கள் தற்போது ராவல்பிண்டி மத்திய சிறையில் உள்ளனர்.
இதில் லக்வியை ரூ.6,30,000 பிணைத் தொகையில் ஜாமீனில் விடுதலை செய்ய இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு சட்டத்தில் நேற்று காலை லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அரசு தரப்பு வழக் கறிஞர் சவுத்ரி ஆசார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
ராவல்பிண்டி சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை லக்வி விடுதலை செய்யப்படுவதாக இருந்தது, ஆனால் அரசு உத்தரவின் பேரில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு அதே சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீனை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் பள்ளியில் கடந்த 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உட்பட 146 பேர் கொல்லப்பட்ட னர். பெஷாவர் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை களை எடுக்க சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்தே லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.