பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் மீதான தீவிரவாதிகளின் வெறித்தாக்கு தலால் 132 இளம்பிஞ்சுகள் உட்பட 148 பேர் பலியாயினர்.
நேற்று பெஷாவர் நகரில் எந்தத் தெருவில் பார்த்தாலும் இறுதி ஊர்வலம் நடந்தது. குழந்தைகளை இழந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரின் கதறல் அந்நகரத்தையே உலுக்கியது. கண்ணீரை அடக்க முடியாமல் சவப்பெட்டிகளை மக்கள் சுமந்து சென்ற காட்சி பார்ப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.
பெஷாவர் நகர் அமைந்துள்ள கைபர் பக்துன்கவா மாகாணத் தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், எந்தவொரு அரசு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. சோகம் கவிழ்ந்த அந்நகரில் நேற்று எங்கு பார்த்தாலும் சவ ஊர்வலங்களாக காட்சியளித்தன. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள், பலவாறாக புலம்பியது கேட் போரின் நெஞ்சை கரையச் செய்யும் வகையில் இருந்தது. தனது மகனை இழந்த தந்தையொருவர் கூறும்போது, “தலைவலிக்கிறது, பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்த எனது மகனை, கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தேன். இப்போது தீவிரவாதிகளின் தாக்குதலில் எனது மகனை இழந்து தவிக்கிறேன்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? வழக்கமாக மாலையில் பள்ளியிலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வருவேன். ஆனால், அன்று முழுவதும் அவனது சடலம் கூட கிடைக்காமல், தேடி அலைந்து கொண்டிருந்தேன்” என்று கண்ணீர்மல்கக் கூறினார்.
மற்றொரு குழந்தையின் பெற்றோர், “காலையில் மகிழ்ச்சி பொங்க சீருடையில் அனுப்பிவைத்தோம். மாலையில், அவனை சவப்பெட்டியில்தான் பார்த்தோம்” என்று தலையிலடித்துக்கொண்டு கதறி அழுதனர்.
நேற்றுமுன்தினம் காலை குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள். நேற்று காலை அவர்களின் சவப்பெட்டியை சுமந்து கொண்டு அடக்கம் செய்யச் சென்றனர்.
தீவிரவாதத்தின் கோரமுகத்தை விளக்குவதற்கு இதைவிட தெளிவான சாட்சியம் வேறு எதுவும் இல்லை.