மாலத்தீவு தலைநகரான மாலியில் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு நாடுகளிடம் மாலத்தீவு உதவி கோரியுள்ளது. இந்தியா, உடனடியாக விமானப் படை விமானம் மற்றும் கடற்படைக் கப்பல் மூலம் 1,000 டன் குடிநீரை அனுப்பி வைத்தது.
இந்தக் குடிநீர் நேற்று மாலத்தீவைச் சென்ற டைந்தது. ஐஎன்எஸ் தீபக் கப்பல் மும்பையிலிருந்து 900 டன் குடிநீரை எடுத்துச் சென்றது. முன்னதாக, கடந்த 5-ம் தேதி, ஐஎன்எஸ் சுகன்யா 35 டன் குடிநீரைக் கொண்டு சென்றது.
மேலும், தினமும் 20 டன் உப்பு நீரை நன்னீராக மாற்றும் திறன் அக்கப்பலுக்கு உள்ளது. இதுவரை, அக்கப்பல் 65 டன் குடிநீரை விநியோகித்துள்ளது.
ஐஎன்எஸ் தீபக் கப்பல், தினமும் 100 டன் அளவுக்கு உப்பு நீரை நன்னீராக்கும் திறன் கொண்டது. உப்பு நீரை நன்னீராக்கும் திறன் கொண்ட இரு போர்க் கப்பல்களும் அங்கு குடிநீர் விநியோகப் பணியைத் தொடர்கின்றன.
விமானப்படை விமானங்களில் கடந்த 5-ம் தேதி 153 டன், நேற்று முன்தினம் 130 டன், நேற்று 80 டன் குடிநீரும் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.