ஜனநாயகம் ஹாங்காங்கில் இருக்குமென்று கூறினாலும், இதுவரை சீனா கைகாட்டிய நபர்கள்தான் ஹாங்காங்கை ஆட்சி செய்து வருகிறார்கள்.
ஹாங்காங் அடிப்படைச் சட்டத்தின் 23-வது பிரிவு பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தப் பிரிவின்படி ஹாங்காங் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி. சீன அரசுக்கு எதிரான போக்குகளைத் தடுக்கவோ, தடுப்பது தொடர்பாகவோ, அரசு ரகசியங்களைத் திருடுவது தொடர்பாகவோ, வெளிநாட்டு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொள்ளத் தடை என்பது தொடர்பாகவோ ஹாங்காங்கே தனக்குரிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.
2002 செப்டம்பர் 24 அன்று சீன அரசு இதில் திருத்தம் கொண்டு வந்தது, Anti-subversion சட்டம் என்று கூறப்பட்ட இத்திருத்தம். கடும் எதிர்ப்புக்குப் பின் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் ‘2017ல் நடை பெறவுள்ள தேர்தலில் ஹாங்காங் கின் முக்கிய செயலதிகாரி தேர்ந்தெடுக்கப்படுவார். ஹாங்காங் மக்களே அவரைத் தேர்ந்தெடுப்பார்கள்’ என்று சீன ஆட்சி மையம் அறிவித்ததும், ஹாங்காங்கின் மகிழ்ச்சி பெரிதும் ஊதப்பட்ட பலூன் போல உற்சாகத்தில் விரிந்தது.
‘நாங்கள் சிலபேரை சுட்டிக் காட்டுவோம். அவர்களிலிருந்து ஒருவரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று அடுத்ததாக சீனாவின் அதிகார மையம் செக் வைத்து பலூனில் ஊசியைச் செருகியது.
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தனர் ஹாங்காங் மக்கள். முதலில் எதிர்ப்புக் கொடியைப் பிடித்தவர்கள் ஹாங்காங்கில் உள்ள பல்கலைக்கழங்களின் ஆசிரியர்கள்தான். ஆனால் போதிய அளவு அவர்களுக்கு பகிரங்க ஆதரவு கிடைத்ததாகத் தெரியவில்லை. ‘மனுக் கொடுப்போம். மற்றபடி எதற்காக தெருவில் ஊர்வலம் என்பதெல்லாம்?’ என்ற எண்ணம் பரவலாக இருந்தது.
ஆனால் நிகழ்ந்தது ஒரு திருப்புமுனை. நூற்றுக்கணக்கில் சாலைகளில் திரண்டவர்களின் எண்ணிக்கை திடீரென லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்தது. காரணம் ஹாங்காங்கின் கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்ததுதான்.
அமைதியான முறையில் போராடுகிறார்கள் என்பதையும் பங்கெடுத்துக் கொள்ளாதவர்களை எந்தவிதத்திலும் அச்சுறுத்துவதில்லை என்பதையும் பிற மாணவர்கள் (முக்கியமாக சென்னையில் உள்ள வன்முறைக்குப் பெயர் பெற்ற ‘அந்த ஐந்து கல்லூரிகளின் மாணவர்கள்’) கவனத்தில் கொள்வார்களா?
2020ல் ஹாங்காங் தனக்கான சட்டசபையை (இதற்கு அங்கு பார்லிமெண்ட் என்றுதான் பெயர்) உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் சீனா உறுதியளித்தது. இப்போதைக்கு அங்குள்ள அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட கொஞ்சம் பேரையும், சீனாவின் மையக்குழு நியமித்த மீதிப் பேரையும் கொண்டதாக இருக்கிறது.
பிரிட்டனின் பிடியில் இருந்த போதுகூட ஹாங்காங்கிற்கு இதே நிலைதான். அதாவது ஜனநாயகம் தழைத்ததில்லை. காலனி ஆட்சிதான். சுதந்திரக் காற்றை முழுமையாக சுவாசிக்கப் போகிறோம் என எண்ணிய ஹாங்காங் மக்களுக்கு கடும் ஏமாற்றம்.
ஜூன் 22, 2014 அன்று ‘ஆக்குபை சென்ட்ரல்’ (Occupy Central) என்ற இயக்கம் மைய ஆட்சி யின் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களை எல்லாம் ஓரணியில் திரட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது. ஹாங்காங்கின் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று அதன் மக்கள் கருதுகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தியது.
கணக்கெடுப்பின் முடிவில் மூன்று சாய்ஸ்களை சீன அரசுக்கு அளித்தது ஹாங்காங். ‘மூன்றில் எதைக் கொடுத்தாலும் ஹாங்காங் தனது பிடியிலிருந்து நழுவி விடும். அல்லது இவற்றில் ஒன்றை ஒத்துக் கொள்வது நாளைய பிரிவினைக்கு அடிகோலிவிடும்’ என்று கருதிய சீனா மூன்றையுமே ஏற்க மறுத்து விட்டது.
ஆனால் ஒன்றை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எக்கச்சக்கமான லாபத்தை உருவாக்கி சீனப் பொருளாதாரத்துக்கு உதவும் ஹாங்காங்கிற்கு வேறொரு விஷயத்தில் சீனா போதிய வசதிகளை செய்து தருகிறது. முக்கியமாக சுங்கம் மற்றும் வரிகள் தொடர்பான விதிகளை ஹாங்காங்கே வகுத்துக் கொள்ள வழி செய்யப்பட்டிருக் கிறது.
இனி என்ன நடக்கலாம்?
சீனாவின் பிற பகுதிகளைவிட ஹாங்காங்கிற்கு பொருளாதாரச் செழிப்பும் அதிகம், அளிக்கப்பட்டுள்ள சுதந்திரமும் அதிகம். எனவே பிரிவினை லெவலுக்கு ஹாங்காங் உடனடியான முடிவுக்கு வரத் தயங்கும்.
அதே சமயம் ஹாங்காங்கால் தங்கள் நாட்டுக்கு உண்டாகியுள்ள பொருளாதார ஆதாயமும், அது ஒரு பொன்முட்டையை இடும் வாத்து என்பதையும், அளவு தாண்டிய அடக்குமுறையை அங்கு ஏவிவிட்டால் உலக அளவில் தாங்கள் தனிமைப்ப டுத்தப்பட வாய்ப்பு உண்டு என்பதும் புரிந்திருப்பதால் சீனாவும் ஹாங்காங்கிற்கு செக் வைக்காது. குறைந்தது வெளிப்படையாகவும் சட்டங்கள் மூலமாகவும் அடக்குமுறை அதிகம் நடை பெறாது. சூழ்ச்சிகரமாக வலை பின்னலாம்.
ஒருபுறம் அடக்குமுறைக்குப் பெயர்போன, அதே சமயம் மின்னல் வேகத்தில் பல முன்னேற்றங்களைக் கண்ட சீனா, மற்றொரு புறம் தனது ஒப்பந்த உரிமைகளை சீக்கிரமே நிலைநாட்டத் துடிக்கும் சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்! - கயிறு இழுக்கும் போட்டி கனகச்சிதமாகத் தொடங்கி விட்டது.
(முடிந்தது.)