தெற்கு இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணத்தால் எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கருப்புப் பெட்டியை தேடும் பணிக்காக ஈடுபடுத்தப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி உரிய தகவல்கள் கிடைக்காமல் கடல்தரைப் பரப்பிற்கு திரும்பியது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் உள்ள பெர்த் கடற்தரைபரப்பில், தேடல் பணியை கூட்டாக மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய நிறுவனம் கூறியிருப்பதாவது:
இந்திய பெருங்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக, விமானத்தை தேடும் பணி இன்று ரத்து செய்யப்பட்டது. காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கடல் பகுதி மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் தேடல் வேட்டை மிகவும் அபாயகரமாக இருக்கும். இருப்பினும் தேடலில் ஈடுபடும் 10 கப்பல்கள் மற்றும் 10 வான்வழி ராணுவ விமானங்கள் தங்களது பணியை தொடரும்.
முன்னதாக கடலுக்கு அடியிலிருந்து பதிவாகிய சிக்னல்கள் மூலம் ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கப்பலான, 'ஓஷன் ஷீல்ட்' தனது இழுவைக் கருவி மூலம் தேடும் முயற்சியை நிறுத்திக்கொண்டது. இதனை அடுத்து ஆளில்லா நீர்மூழ்கியான, புளூபின் 21 இந்த தேடல் வேலையை மேற்கொண்டது.
ஆனால் இந்த ஆளில்லா நீர்மூழ்கி 7 முறை ஆழ்கடலுக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீட்புக்குழுவினர் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே கருப்பு பெட்டியை தேடும் பணியை 5 அல்லது 6 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக இந்த பணியை பல்வேறு மாதங்களுக்கு நீட்டிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையிலேயே தேடல் தொடர்கிறது.
தேடல் 75 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பிலிருந்து 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவாக குறைக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த விமான தேடலுக்காக உலக வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளாத அளவு செலவாகி வருவதாக கூறப்படுகிறது.