பண்டைய மெசபடோமிய நாகரிகத்தின் முக்கிய அங்கமாக திகழ்ந்த பாபிலோன் நகரம் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகாரம் அளிக்கப்படுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று பிபிசி வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
ஐ.நாவின் மதிப்புமிக்க இடங்களின் பட்டியலில் 4,000 ஆண்டுகள் பழமையான நகரமான பாபிலோனை சேர்க்க வேண்டும் என்று 1983 முதல் தொடர்ந்து ஈராக் கூறி வருகிறது.
இந்நிலையில் ஈராக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட யுனெஸ்கோ தமது முடிவை அறிவித்துள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
"ஹம்முராபி மற்றும் நேபுகாத்நேசர் போன்ற சிறந்த ஆட்சியாளர்களின் கீழ், அடுத்தடுத்த பேரரசுகள் பாபிலோனை ஆண்டது. நியோ-பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் படைப்பாற்றலின் வெளிப்பாட்டை பாபிலோன் பிரதிபலிக்கிறது. பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக பாபிலோன் திகழ்கிறது. இங்குள்ள மாளிகையின தொங்கும் தோட்டங்கள் - உலக அளவில் கலை, பிரபலமான மற்றும் மத கலாச்சாரத்திற்கு ஊக்கம் அளிக்கக்கூடியனவாகும்.
சதாம் உசைன் மற்றும் அமெரிக்கா
எனினும் இப்பகுதி "மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில்" இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் சதாம் ஹுசைனுக்கு இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டதிலிருந்தும், அதனைத் தொடர்ந்து அமெரிக்க துருப்புகளுக்கான தளமாக பயன்படுத்தப்படுவதிலிருந்தும் இந்த தளம் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு இத்தகைய போர்ச்சூழலிலிருந்து அவசரகால பாதுகாப்பு தேவை'' என்றும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது
ஐ.நா. உலக பாரம்பரியக் குழு சமீபத்தில் அஸர்பைஜானில் கூடி விவாதித்தது. அதில், கவுரவிக்கப்பட வேண்டிய சமீபத்திய தளங்கள் குறித்து முடிவு செய்தது.
அவ்வகையில் முழு மனிதகுலத்திற்கும் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களால் பாதுகாக்கப்படும் பகுதிகளுக்கு அல்லது வரலாற்று மைல்கல்லுக்கு இந்த கவுரவம் வழங்கப்படுவதாக ஐநா உலகப் பாரம்பரியக் குழு தெரிவித்தது.
ஐநாவின் இம்முடிவை வரவேற்றுள்ள ஈராக் பிரதிநிதிகள் குழு, இது ''பாபிலோன் மற்றும் மெசபடோமிய நாகரிகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது'' என்று கருத்து தெரிவித்துள்ளது.