லிபியாவில் அகதிகள் மையத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.
இதுகுறித்து லிபியா அரசுத் தரப்பில், “லிபியத் தலைநகர் திரிபோலியில் ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகள் மையத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.
70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதன் காரணமாக வான்வழித் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபியக் கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார்.
அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.
கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் ஐஎஸ் அமைப்பு வலுவாகக் காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.