உலகம்

சார்க் மாநாட்டில் நவாஸ் ஷெரீப்பை கண்டுகொள்ளாத மோடி

பிடிஐ

சார்க் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடையே முறை சார்ந்த சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 8 தெற்கு ஆசிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட இருக்கைகளிலிருந்து சற்றே இரண்டு இருக்கைகள் அருகே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமர்திருந்தார்.

இருவருக்கும் நடுவே மாலத்தீவு மற்றும் நேபாள நாட்டுத் தலைவர்கள் மட்டுமே இருந்த நிலையிலும் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கைக்குலுக்கள் போன்ற முறை ரீதியிலான விசாரிப்புகள் எதுவும் நடக்கவில்லை.

மேலும், சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற மாநாட்டில் பேசும் போதும் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

சார்க் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், பாகிஸ்தான் அரசிடம் இருந்தும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்றும் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.

இதற்கு மாறான கருத்தாக, "இந்தியாவுடன் அமைதியை கடைப்பிடிக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இதை பாகிஸ்தானின் பலவீனமாக இந்தியா கருதக்கூடாது. எல்லையில் இந்திய ராணுவம் அடிக்கடி அத்துமீறுகிறது" என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT