இரண்டாம் உலகப் போரின்போது நாஜி துருப்புக்களால் திருடப்பட்ட டச்சு கலைஞரான ஜான் வான் ஹுய்சூமின் ஓவியம் இத்தாலிக்குத் திருப்பியளிக்கப்படும் ஜெர்மன் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று ஜெர்மன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ்ஸூம் இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் என்ஸோ மூவேரோவும் இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்குச் செல்ல இருக்கிறார்கள். அப்போது அங்குள்ள யூசிஃபி காட்சியகத்தில் நாஜிக்கள் திருடிவந்த ஓவியத்தை முறையாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், யூசிஃப்பி காட்சியக இயக்குனர், ஈக் ஷ்மிட், ஓவியத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டுமென்று பொதுவெளியில் பகிரங்கமாக முறையிட்டார்.
பூந்தொட்டி என்று தலைப்பிடப்பட்ட இந்த எண்ணெய் ஓவியம் 1824 ஆண்டு முதல், இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் வரை புளோரன்சில் உள்ள பிட்டி அரண்மனை சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
பின்னர் நாஜிக்களின் ஊடுருவலின்போது இது ஜெர்மன் துருப்புக்களால் திருடப்பட்டது. அதன்பின்னர் ஏற்பட்ட ஜெர்மனியின் மறு ஒருங்கிணைப்புக்குப் பிறகுகூட இவ்ஓவியம் நீண்டகாலம் மீண்டும் வெளிவராமல் இருந்தது.
தற்போது ஓவியம் வைத்திருக்கும் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.