இந்தியா, ஆஸ்திரேலியா இடையே முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று இருநாட்டு தலைவர்களும் அறிவித்துள்ளனர்.
சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தி வரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சக் ஹேகல் அண்மையில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாடாளுமன்றத்தில் உரை
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. தீவிரவாதத்துக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். கடலோரப் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். பொருளாதார, பாதுகாப்பு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
டோனி அபோட்டுக்கு மோடி பரிசு
ஆஸ்திரேலியா முதல் நாவல் ஆசிரியரான ஜான் லாங் 1842-ல் இந்தியாவில் குடியேறினார். வழக்கறிஞர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்ட அவர், இந்திய சுதந்திர போராட்ட வீரர் ராணி லட்சுமிபாயின் வழக்கறிஞராக பணியாற்றினார். லட்சுமிபாய்க்காக அவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக மனு அனுப்பினார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார்.
அவரது கையெழுத்துப் பிரதி மனுவை டோனி அபோட்டிடம் நரேந்திர மோடி அளித்தார்.