போர்க்குற்ற விசாரணைகளை நடத்த விடாமல் இலங்கை அரசு செயல்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் ஸீத் ராத் அல் ஹுசைன் தெரிவித்த கருத்தை இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளது.
இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி, ரவிநாத ஆர்யசின்ஹா இது குறித்து ஹுசைனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ஐ.நா. என்ற அமைப்பில் உயர் அதிகாரியான நீங்கள் ஐ.நா.வின் உறுப்பு நாடான இலங்கையின் நேர்மையை சந்தேகித்தும், அதனை தாக்கியும் பேசியிருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது. மேலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அபவாத மொழியை பிரயோகித்துள்ளீர்கள்.
நீதிக்கும் நியாயத்திற்கும் சிறிது கூட ஒத்துப் போகாத ஒரு விசாரணைக்கு ஒரு நாடு அதன் மக்களை ஆட்படுத்த முடியாது, ஆகவே இலங்கை அரசு இலங்கை நாட்டின், அதன் மக்களின் மரியாதைக்கு கட்டுப்பட்டது” என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டார்.
நேற்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் ஹுசைன் இலங்கை அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பிய போது, “விசாரணையை இலங்கை ஏற்க மறுத்தது. மேலும் விசாரணை அதிகாரிகளை நாட்டிற்குள் விடவே அனுமதிக்கவில்லை. மேலும் தங்களுக்கு எதிரான கருத்துகள் வரும் என்ற அச்சத்தில் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் உட்பட ஜனநாயக அமைப்புகள் மீது கடும் கண்காணிப்பை ஏவி விட்டுள்ளது இலங்கை. மறைக்க எதுவுமில்லாத இலங்கை விசாரணைக்கு ஒத்துழைக்காதது ஏன்?” என்று சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
முந்தைய ஐ.நா. அறிக்கையில், இலங்கைப் போரின் போது கடைசி மாதங்களில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான் சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காததை கண்டித்து நேற்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் ஹுசைன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று இலங்கை அவருடைய மொழியை ‘அபவாதம்’ என்று கண்டித்துள்ளது.