'டைம்' இதழின் சிறந்த மனிதருக்கான போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி இருக்கிறார்கள் பெர்குசன் போராளிகள்.
ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வரும் அமெரிக்காவின் டைம் இதழ், இந்த ஆண்டுக்கான வாக்கெடுப்பை இணையத்தில் நடத்தி வருகிறது.
இதில், அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து போராடி வரும் அப்பகுதியைச் சேர்ந்தப் போராட்டக்காரர்கள் 10.8 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 9.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நவம்பர் 26-ம் தேதி வரை பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார். ஆனால், பெர்குசன் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அப்போராட்டக்காரர்கள் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தப் போட்டியில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் ஜோஸ்வா வாங் மூன்றாம் இடத்தில் உள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா நான்காம் இடத்திலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 5-ம் இடத்திலும் உள்ளனர்.
இரண்டு முறை சிறந்த மனிதர் விருதை வென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2.4 சதவீத வாக்குகளுடன் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வாசகர்களின் கருத்துக் கணிப்பு டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் டிசம்பர் 8-ம் தேதி முடிவு வெளியிடப்படும். டிசம்பர் 10-ம் தேதி டைம் இதழின் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.