உலகம்

நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 24 பேர் பலி

ஏஎஃப்பி

நேபாளத்தில் மலைகள் நிறைந்த மேற்குப் பகுதியில் உள்ள ஓர் ஆற்றில் பயணிகள் பஸ் ஒன்று நேற்று கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 45 பயணிகளுடன் சென்ற இந்த பஸ், ஜஜார்கோட் பகுதியில் நேற்று காலை சென்றபோது குறுகலான சாலையிலிருந்து விலகி பேரி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நீச்சல் வீரர்கள், போலீஸார் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 2 குழந்தைகள் உட்பட 5 சடலங்கள் கிடைத்துள்ளதாக ஜஜார்கோட் காவல் துறை உயர் அதிகாரி தினேஷ் ராஜ் மைநாலி நேற்று மதியம் தெரிவித்தார்.

மேலும் உயிருடன் மீட்கப்பட்ட 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து, மற்றொரு காவல் துறை உயர் அதிகாரி ஷேர் பகதூர் சவுத்ரி கூறும்போது, “இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், அதிகாரப்பூர்வ பயணிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களைவிட கூடுதல் பயணிகள் பஸ்ஸில் பயணம் செய்திருக்க வாய்ப்பிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT