உலகம்

செப்டம்பர் 23-ல் சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளி தொழிலதிபர் போட்டி

செய்திப்பிரிவு

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 23-ம் தேதி நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் போட்டியிடுகிறார்.

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங்யாம் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, அதிபர் தேர்தல் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 13-ம் தேதி நடக்கிறது. அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடலாம் என்று சமீபத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாலே மரிக்கான் அறிவித்துள்ளார். தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல, சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்ணும், கப்பல் நிறுவனத்தின் தலைவர் பரீத் கான் என்பவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலுக்கான கமிட்டி, வேட்பாளர்களின் மனுக்களைப் பரிசீலித்து தங்கள் முடிவை செப்டம்பர் 12-ம் தேதி அறிவிக்கும். தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் செப்டம்பர் 23-ம் தேதி தேர்தல் நடக்கும். ஒருவர் மட்டுமே போட்டியிட்டாலோ அல்லது போட்டியிட தகுதியானவராக ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டாலோ அவரே புதிய அதிபராக அறிவிக்கப்படுவார்.

SCROLL FOR NEXT