ஹெல்ம்ஃபோன் என்பது சத்தத்தைத் தடை செய்யக்கூடிய தலைக்கவசம். அலுவலகங்களில் தற்போது அருகருகே அமர்ந்து வேலை செய்யக்கூடிய சூழல் இருக்கிறது. உரையாடல்கள் அதிகம் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது. அதே போல ஒரு தொலைபேசியில் கூடத் தனியாகப் பேச முடியாமல், வெளியில் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தச் சங்கடங்களை எல்லாம் தவிர்ப்பதற்காகவே ஹெல்ம்ஃபோனை உருவாக்கியிருக்கிறது உக்ரைனைச் சேர்ந்த ஹோச்சு ராயு நிறுவனம். வழக்கமான தலைக்க வசத்தைவிட இது சற்றுப் பெரியது. இதை அணிந்துகொண்டால் வெளியிலிருந்து வரும் எந்தச் சத்தமும் சிறிதும் கேட்காது. இதன் மூலம் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். இதை அணிந்த படியே உங்களது அலைபேசியில் பேசினால் அருகில் இருப்பவருக்குக் கேட்காது. “இந்தத் தலைக்கவசத்தை அலுவலக நேரம் முழுவதும் அணிந்துகொள்ளலாம். வெளியுலகம் எப்படி இருந்தாலும் நீங்கள் உங்களுக்கே உங்களுக்கான தனி உலகத்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். தலைக்கவசத்துக்குள் மைக்ரோபோன், போன் வைக்கும் இடம், ஸ்பீக்கர்கள் என்று பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. விரைவில் விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் ஹோச்சு ராயு நிறுவன அதிகாரி.
அலுவலகத்துக்குள் ஹெல்மெட்டா!
அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியிலுள்ள ஹார்வெல் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தான் 11 வயது ப்ரூடி ப்ரூக்ஸ். திடீரென்று தூண்டில் கனமானது. பெரிய மீன் சிக்கிவிட்ட மகிழ்ச்சியில், கஷ்டப்பட்டு இழுத்துக் கரை சேர்த்தான். ஆனால் தூண்டிலில் சிக்கியது மீன் அல்ல. ப்ரூக்ஸ் பயந்து போனான். தன் வீட்டிலுள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தான். மெதுவாக அந்தப் பொருளை ஆராய்ந்தார்கள். ஒரு கைப்பை என்று கண்டுபிடித்தனர். சுத்தம் செய்து, பையிலிருந்த பொருட்களை வெளியில் எடுத்தனர். சில கரன்சிகள், கடன் அட்டைகள், குழந்தையின் புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவை இருந்தன. முகவரி அட்டையைப் பார்த்ததும் ப்ரூக்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் கத்தினார்கள். இந்தக் கைப்பைக்குச் சொந்தக்காரர் இவர்களது தூரத்து உறவினர் போல்ட். “25 ஆண்டுகளுக்கு முன்பு போல்ட் இந்தப் பகுதியில்தான் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை. போல்ட்டின் தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து தகவல் சொன்னோம்” என்கிறார் ப்ரூக்ஸின் தந்தை. “25 ஆண்டுகளாகியும் என்னால் அந்தக் கைப்பை தொலைந்ததை மறக்க முடியவில்லை. அதில் இருந்த கரன்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் 15 மாதக் குழந்தையின் அரிய புகைப்படங்கள் அதிலிருந்தன. அதுதான் வருத்தம். குழந்தையுடன் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கைப்பை காணாமல்போனது. யாராவது பணத்துக்காகப் பையை எடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன். எப்படி ஏரிக்குள் விழுந்தது என்றே தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாகியும் பை பெரிதாகப் பாதிப்பில்லாமல் இருந்ததை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தையின் படங்கள்கூட ஓரளவு நன்றாக இருக்கின்றன. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 26 வயது மகனிடம் அவனது படங்களைக் காட்டப் போகிறேன்” என்கிறார் போல்ட்.
தொலைந்த பை 25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அதிசயம்!