உலகம்

சீனாவை இலக்காகக் கொண்டு அணு ஆயுதங்களை நவீனப்படுத்துகிறது இந்தியா: அமெரிக்க நிபுணர்கள் தகவல்

பிடிஐ

எல்லையில் அச்சுறுத்தி வரும் சீனாவை இலக்காகக் கொண்டு அணு ஆயுதங்களை இந்தியா நவீனப்படுத்தி வருவதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஆப்டர் மிட்நைட்’ என்ற இணையதள இதழின் ஜூலை-ஆகஸ்ட் பதிப்பில் ‘இந்திய அணு ஆயுத படைகள் 2017’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அணு ஆயுத நிபுணர்கள் ஹன்ஸ் எம்.கிறிஸ்டென்சன் மற்றும் ராபர்ட் எஸ்.நோரிஸ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

வழக்கமாக பாகிஸ்தானை அச்சுறுத்தும் நோக்கில் இந்தியா வின் அணு ஆயுத கொள்கை இருக்கும். ஆனால் இப்போது, சீனாவையும் முக்கிய இலக்காகக் கொண்டு தனது கொள்கையை வகுத்து அணு ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து நவீனப்படுத்தி வருகிறது.

இந்தியா இப்போது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் 7 ஏவுகணைகள், 2 விமானங்கள், தரையிலிருந்து ஏவக்கூடிய 4 ஏவு கணைகள், கடல் பகுதியிலிருந்து ஏவக்கூடிய 1 ஏவுகணை ஆகியவற்றை இயக்கி வருகிறது. மேலும் புதிதாக 4 ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. இந்தப் பணி துரிதமாக நடைபெறுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இது ராணுவத்தில் சேர்க்கப்படும்.

மேலும் 150 முதல் 200 அணு ஆயுதங்களுக்கு தேவையான 600 கிலோ புளுடோனியத்தை இந்தியா தயாரித்து வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இவை அனைத்தையும் அணு ஆயுதங்களுக்காக பயன்படுத்த வில்லை. 120 முதல் 130 அணு ஆயுதங்களை மட்டுமே தயாரித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தென்னிந்தியாவி லிருந்து ஏவினால் சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணையையும் இந்தியா தயாரித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் டோகாலா பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்தக் கட்டுரை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT