உலகம்

இலங்கை தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படத்தை வெளியிட்டார் கயானா பிரதமர்

செய்திப்பிரிவு

தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்.

புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் மு.இளங்கோவன், இலங்கைப் பேரறிஞரும் யாழ்நூல் ஆசிரியரு மான விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பணிகளையும் இலக்கியப் பணிகளையும் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த இலங்கையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை, திருக் கொள்ளம்பூதூர், கொப்பனாப்பட்டு ஊர்களில் படப்பிடிப்பு நடந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்துவரும் மூத்த பேராசிரியர் கள், துறவிகள் பலரை நேர்காணல் செய்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

இந்த ஆவணப்படம் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் கடந்த 1-ம் தேதி நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங் களின் பேரவை (பெட்னா) விழாவில் வெளியிடப்பட்டது. கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து ஆவணப் படத்தை வெளியிட்டு, அதன் இயக்குநர் மு.இளங்கோவனைப் பாராட்டினார்.

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டார். அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவைத் தலைவர் செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, சிவம் வேலுப் பிள்ளை, வலைத்தமிழ் ஆசிரியர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் படியினைப் பெற்றுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT