உலகம்

உலக மசாலா: வேலைக்காகத் தினமும் விமானப் பயணம்!

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார் கர்ட் வோன் படின்ஸ்கி. இவரது அலுவலகம் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிறது. தினமும் 6 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து அலுவலகம் சென்று வருகிறார்! அதிகாலை 5 மணிக்குக் கிளம்புகிறார்.

15 நிமிடம் காரில் பயணம் செய்யும்போது காலை உணவைச் சாப்பிடுகிறார். சிங்கிள் இன்ஜின் விமானத்தில் 568 கி.மீ. தூரத்தை 90 நிமிடங்களில் கடந்து ஆக்லாந்தை அடைகிறார். அங்கிருந்து மற்றொரு காரில் பயணம் செய்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது அலுவலகத்தை அடைகிறார்.

8.30 மணிக்கு வேலையை ஆரம்பிக்கிறார். மீண்டும் மாலை 5 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்புகிறார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்கிறார். “நான் தினமும் சான் பிரான்ஸ்சிஸ்கோவுக்கு வேலைக்குச் செல்கிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னுடைய நிறுவனம் முதலில் லாஸ் ஏஞ்சல்ஸில்தான் இருந்தது. திடீரென்று நிறுவனத்தின் வளர்ச்சி கருதி சான் பிரான்சிஸ்கோவுக்கு மாற்றினார்கள். எங்கள் குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருப்பதுதான் வசதியாக இருக்கிறது.

அதேநேரம் என் நிறுவனத்தையும் என்னால் கைவிட முடியவில்லை. நான் உயர் பொறுப்பில் இருக்கிறேன். அதனால் தினமும் இவ்வளவு தொலைவைக் கடந்து வேலை செய்து வருகிறேன். காலை 3 மணி நேரப் பயணம். மாலை 3 மணி நேரப் பயணம். இதற்காக மாதம் 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு பாஸ் வாங்கி வைத்திருக்கிறேன். இந்த விமானத்தில் 8 பேர் என்னுடன் பயணிப்பார்கள். வழக்கமான விமானப் பயணத்துக்கான எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. பாதுகாப்பு பரிசோதனையும் இல்லை.

காரிலிருந்து இறங்கிய சில நிமிடங்களில் விமானத்தில் ஏறிவிடலாம். தினமும் காலை உற்சாகமாக என் நாளை ஆரம்பிப்பேன். மாலை களைப்படைந்து விடுவேன். ஆனாலும் வீட்டுக்காக அலுவலகத்தையோ, அலுவலகத்துக்காக வீட்டையோ விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது” என்கிறார் கர்ட் வோன் படின்ஸ்கி.

இந்த ஆசைதான் செயற்கைக் கருத்தரிப்பு தொழிலைச் செழிக்க வைக்கிறது!

செர்பியாவைச் சேர்ந்த அட்டிஃபா, 60 வயதில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். அவரது கணவர் செரிஃப் நோகிக், குழந்தையைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை.

“எனக்கு 68 வயதாகிவிட்டது. எங்கள் இருவருக்கும் ஏராளமான நோய்கள். இந்தக் காலகட்டத்தில் ஒரு குழந்தையைப் பெற்று, வளர்க்க இயலுமா? என் மனைவி சிறிதும் புரிந்துகொள்ளவில்லை. பல ஆண்டுகளாகக் குழந்தை வேண்டும் என்ற ஏக்கமும் ஆசையும் அவரைத் துணிச்சலாக இறங்க வைத்திருக்கிறது. செயற்கை முறையில், விந்து நன்கொடை பெற்று, பல ஆண்டுகள் முயற்சி செய்ததில் இப்போது குழந்தை பிறந்துவிட்டது.

என்னால் அந்தக் குழந்தைக்கு எந்த விதத்திலும் உதவ முடியாது என்பதை முன்பே சொல்லிவிட்டேன்” என்கிறார் செரிஃப். “கணவர் சொல்வதில் தவறில்லை. ஆனால் ஒரு குழந்தையின் குரலைக் கேட்கத்தானே இத்தனை காலம் காத்திருந்தேன். இரவெல்லாம் கண் விழிக்கிறேன். வேலை அதிகம் செய்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யார் உதவியும் இல்லாமலே என் மகளை வளர்த்துவிடுவேன்” என்கிறார் அட்டிஃபா.

SCROLL FOR NEXT