தேசத் துரோக வழக்கின் அடிப்படையாக விளங்கும் விசாரணை அறிக்கையின் நகலை வழங்குமாறு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கை மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முஷாரப் மீதான தேச துரோக வழக்கை, சிந்து உயர் நீதிமன்றத்தின், நீதிபதி பைசல் அராப் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு முன் முஷாரப்பின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரூக் நாசிம், “இவ்வழக்கு விசாரணை நேர்மையான நடைபெற வேண்டும். இல்லாவிடில் விசாரணையே நடத்த வேண்டாம். எப்.ஐ.ஏ.வின் விசாரணை அறிக்கையின் நகலுடன், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தரப்படவேண்டும். விசாரணை அறிக்கை இதுவரை எங்களுக்கு தரப்படாதது அரசாங்கத்தின் தீய நோக்கத்தையே காட்டுகிறது.
பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. காணாமல்போன ஆவணங்கள் எவையென்பதை அறிய விசாரணை அறிக்கையே உதவும். அரசியலமைப்பு சட்ட விதி 6-ன் கீழ் விசாரணை தொடங்கியது தவறு. இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றார்.
முஷாரப் மீதான வழக்கு வெள்ளிக்கிழமை முதல் தினசரி நடைபெறும் என்று சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் முஷாரப்பின் இம்மனுவை தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கொலையில் தொடர்பு உள்பட 4 வழக்குகளை பர்வேஸ் முஷாரப் சந்தித்து வருகிறார். தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் முஷாரப் மறுத்து வருகிறார்.