அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குடியரசு கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவையில் குடியரசு கட்சியின் பலம் 52 ஆக உயர்ந்துள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.
இதேபோல் பிரதிநிதிகள் அவையில் குடியரசு கட்சியின் பலம் 235 ஆக உயர்ந்துள்ளது. ஜனநாயக கட்சியின் பலம் 157 ஆக குறைந்துள்ளது. இரு அவைகளிலும் குடியரசு கட்சி பெரும்பான்மை பலம் பெற்றிருப்பதை முன்னிட்டு பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் ஜான் போனர், குடியரசு கட்சியின் மூத்த தலைவர் மேக்கானல் ஆகியோர் ‘வால்ஸ்டீரிட் ஜர்னல்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அதிபரின் ‘ஒபாமாகேர்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே அந்தத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்துவோம். ஆளும் கட்சியின் தவறான கொள்கைகளால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே நாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு குடியரசு கட்சியினர் கைக்கு மாறியுள்ளது.
வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் மாற்றுக் கொள்கைகள் அவசியம். இனிமேல் இரு அவைகளிலும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறும். ஜனநாயக கட்சியின் பலம் குறைந்தாலும் அந்த கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.
பல்வேறு புதிய திட்டங்களை விரைந்து நிறைவேற்ற அரசை வலியுறுத்துவோம். குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்த நாடு முழுவதும் ‘ஸ்மார்ட்’ பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை இழக்கவில்லை- ஒபாமா பேட்டி
அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க செனட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் அதிகாரம் மிக்க செனட் அவையில் இனி குடியரசு கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவோடு தனது அனைத்து நடவடிக்கைகளையும் ஒபாமா நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கூறியுள்ளது: நிதிப் பற்றாக்குறையை பெருமளவில் குறைத்துள்ளோம். ஏராளமான மக்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் எனது பதவி காலம் முடிய இருக்கிறது. இது இயல்பானதுதான். இனி செனட் அவை குடியரசு உறுப்பினர்களின் பெரும்பான்மையோடு அமெரிக்க மக்களுக்காக இயங்கும். அவர்களது கருத்துக்களோடு ஆட்சியை நடத்த நான் ஆவலுடன் இருக்கிறேன். ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ள சாலைகள், மேம்பாலங்கள் ஏனைய வசதி மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கான திட்டங்கள் அனைத்தும் அவை உறுப்பினர்களின் வழிகாட்டுதலோடு நடைபெறும் என்றார்.