சீன மனித உரிமை ஆர்வலர் லியூ ஜியாபோவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மனைவி லியூ ஜியா வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி யிலிருந்து மட்டுமே அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படு கின்றனர். அங்கு எதிர்க்கட்சிகளே கிடையாது.
இந்த ஜனநாயகவிரோத நடை முறையை உலக நாடுகள் தொடர்ந்து விமர்சித்து வருகின் றன. அங்கு அவ்வப்போது நடை பெறும் ஜனநாயக உரிமை போராட் டங்கள் ராணுவத்தால் ஒடுக்கப்படு கின்றன.
அந்த நாட்டைச் சேர்ந்த லியூ ஜியாபோ அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி ஜனநாயகத்துக் காக குரல் கொடுத்தார். அதற்காக ‘சார்டர் 08’ என்ற அரசியல் சீரமைப்பு சாசனத்தை உருவாக்கி மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அரசுக்கு எதிராகச் செயல்பட்ட தாகக் கூறி 2009-ம் ஆண்டில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண் டனை விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப் பட்டது.
சிகிச்சைக்காக அவரை விடுதலை செய்யக் கோரி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால் சீன அரசு மறுத்துவிட்டது. கடந்த 13-ம் தேதி அவர் மருத்துவமனை யில் உயிரிழந்தார். அவரது உடல் சென்யாங் நகரில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் லியூவின் மனைவி லியூ ஜியாவும் சில உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
லியூ ஜியாபோ சிறையில் அடைக்கப்பட்டபோது அவரது மனைவி லியூ ஜியா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். மாதம் ஒருமுறை மட்டுமே கணவரை பார்க்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது லியூ காலமானதைத் தொடர்ந்து மனைவி லியூ ஜியாவை விடுதலை செய்து அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறிய போது, லியூ ஜியா வீட்டை விட்டு சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அவர் வீட்டுக் காவலில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் உண்மை இல்லை. இறுதிச் சடங்கில்கூட உறவினர்கள் கலந்து கொள்ள சீன அரசு அனுமதிக்கவில்லை. லியூ ஜியா தொடர்ந்து வீட்டுக் காவலில்தான் உள்ளார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.