உலகம்

ஜி-20 மாநாட்டில் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை: சீனா

செய்திப்பிரிவு

ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பதற்கு சாதகமான சூழ்நிலை தற்போது இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் எல்லை தாண்டிய தீவிரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய விவாதமாக பேசப்படவுள்ளன. மேலும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இரு நாடுகள் உறவு குறித்து பேசவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது சிக்கிம் மற்றும் பூடான் விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருவதால் இந்தச் சந்திப்பு நடைபெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.

இதுகுறித்து சீனா தரப்பில், "ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு நாடுகள் உறவு குறித்த சந்தித்து பேச சாதகமான சூழ்நிலை தற்போது இல்லை.

சீனா மற்றும் இந்தியா எல்லைப் பகுதிகளில் சமாதானத்தை நிலைநிறுத்த இந்திய எல்லையிலுள்ள துருப்புகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும். இரு பக்கத்திற்கும் இடையிலான அர்த்தமுள்ள சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன் இது போன்ற நிபந்தனைகள் தேவை'' என்று கூறியுள்ளது.

முன்னதாக, இந்தியா வரலாற்றுப் பாடங்களைப் புறக்கணிக்கிறது என்றது சீனா. சிக்கிம் எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் "வரலாற்றை சீனா நமக்கு நினைவூட்ட விரும்பினால், 1962 சூழ்நிலை வேறு, 2017-ல் இந்தியா வேறு” என்று அருண் ஜேட்லி சீனாவுக்கு பதிலடி அளித்தார்.

இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், “1962 இந்தியாவுக்கும் 2017 இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அருண் ஜேட்லி கூறுவது சரியே அதே போல்தான் சீனாவும் மாறிவிட்டது. இந்திய அரசு 1890 உடன்படிக்கையை மதிக்க வேண்டும். எல்லையைக் கடந்து வரும் இந்திய படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். எங்களுடைய இறையாண்மையைக் காக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம்" என்று இந்தியாவை மறைமுகமாக எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் எல்லைப் புறத்திலும் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT