உலகம்

அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: இம்ரான், உல் காத்ரிக்கு கைது வாரண்ட்

ஏஎஃப்பி

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான், தாஹிர் உல் – காத்ரி ஆகியோருக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சி யின் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவர் தாஹிர் உல் – காத்ரி ஆகியோர் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி தனித்தனியாக பேரணி நடத்தினர்.

நவாஸ் ஷெரீப்பை ஆட்சியிலிருந்து நீக்குவது என்ற குறிக்கோள் நிறைவேறாத நிலையில், தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட தனது சில கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபின், காத்ரி கனடா சென்றுவிட்டார்.

இம்ரான் கான், தொடர்ந்து அரசுக்கு எதிராக பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். வரும் 30-ம் தேதி இஸ்லாமாபாதில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இம்ரான் மீது வழக்கு

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நாடாளுமன்றம், அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதற்காக இம்ரான் கான், தாஹிர் உல் – காத்ரி மற்றும் 26 பேர் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சயீத் கவுசர் அப்பாஸ் ஜெய்தி விசாரித்தார். அப்போது, இம்ரான் கான், காத்ரி மற்றும் 26 பேருக்கு எதிராக கைது வாரண்ட்டை நீதிபதி பிறப்பித்தார்.

SCROLL FOR NEXT