சீனாவின் புதிய போர்க்கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த கப்பல் அடுத்த ஆண்டு சீன கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
அமெரிக்க கடற்படையில் தற்போது 275 போர்க்கப்பல்கள் உள்ளன. அதற்கு இணையாக சீன கடற்படையை வலுப்படுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஏராளமான போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 18 போர்க்கப்பல்கள் சீன கடற்படையில் சேர்க்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் 055 ரகத்தைச் சேர்ந்த புதிய போர்க்கப்பல் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஜியாங்னன் கட்டுமானத் தளத்தில் நேற்று நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இதில் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. 10,000 டன் எடை கொண்ட இந்த போர்க்கப்பல் அடுத்த ஆண்டில் சீன கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
இதேபோல மேலும் 3 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக வரும் 2020-ம் ஆண்டுக்குள் 270 போர்க்கப்பல்கள் கொண்ட வலுவான கடற்படையை உருவாக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமன்றி ஜப்பான், இந்தியாவுக்கு சவால் விடுக்கும் வகையிலும் சீன கடற்படை தனது போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் புதிய போர்க்கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.