அமெரிக்காவிடம் இருந்து சிவில் மற்றும் ராணுவ உதவிகளைப் பெறுவதற்கு, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் திருப்தி அளிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு பரிசீலிக்க உள்ளது. .
பாகிஸ்தானுக்கு சிவில் மற்றும் ராணுவ உதவிகள் வழங்குவ தற்கான சட்டவிதிகளைக் கடுமை யாக்கும் பரிந்துரைகள், இது தொடர்பான சட்டமசோதாவில் இடம்பெற்றுள்ளன. இந்த பரிந்துரைகளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டு குழு ஆராய உள்ளது.
இதில், தீவிரவாத அமைப்பு களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துவருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நற்சான்று அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு நிதியை விடுவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஹக்கானி நெட்வொர்க், குவெட்டா ஷுரா தலிபான், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இமுகம்மது, அல்-காய்தா மற்றும் பிற உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிப்பதாக வெளியுறவு அமைச்சர் சான்று அளிக்க வேண்டும். இந்த அமைப்புகள் உள்நாட்டில் இருந்து செயல்படுவதையும் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதையும் தடுப்பதற்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் சான்று அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.