ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போர் நிறைவடையவில்லை என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
சிரியா, இராக் நாடுகளின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி அரசை நடத்தி வந்தனர். இருநாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 2014-ம் ஆண்டு ஜூனில் அமெரிக்க கூட்டுப் படை போர் தொடுத்தது.
இராக்கில் அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த நகரங்களை அந்த நாட்டு ராணுவம் மீட்டது. இராக்கின் 2-வது மிகப்பெரிய நகரான மோசூல் கடந்த 2014 முதல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நகரை இராக் ராணுவம் அண்மையில் மீட்டது. இதன்மூலம் இராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டு பிரதமர் ஹைதர் அல் பாக்தாதி தெரிவித்துள்ளார்.
எனினும் சிரியாவின் பெரும் பகுதி இன்னமும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ராக்கா நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகமாகக் கருதப்படு கிறது. அந்த நகரை அமெரிக்க ஆதரவு படைகள் சுற்றி வளைத் துள்ளன. அமெரிக்க கூட்டுப் படை தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து அமெரிக்காவின் சிறப்பு தூதர் பிரெட் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இராக்கின் மோசூலை மீட்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடத்தி அண்மையில் அந்த நகரை மீட்டோம். இது மிகப்பெரிய வெற்றி. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மோசூல் போரில்தான் மிகப்பெரிய சவால்களை சந்தித்தோம்.
இன்னமும் சிரியாவின் ராக்கா நகரில் ஏராளமான ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். இராக்கைவிட சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவது மிகவும் சிக்கலானது. எனினும் ராக்கா நகரையும் மீட்க புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் வெளிநாட்டினர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததால் அந்த அமைப்பு வலுப்பெற்றது. அவர்களில் பெரும்பாலானோர் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள்.
அதனால்தான் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனிமேல் வெளிநாட்டினர் யாரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய முடியாது. இதேபோல சிரியாவில் உள்ள வெளிநாட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பி விடாதபடி பலத்த பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளோம்.
எங்களைப் பொறுத்தவரை ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான போர் இன்னமும் முடியவில்லை. அந்த அமைப்பு வேரோடு அழிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.