உலகம்

சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார் ட்ரம்ப்

ஏபி

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, ட்ரம்ப் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்க அதிபர்களிலேயே பதவியேற்ற பிறகு முதல் சர்வதேச பயணமாக இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் அதிபர் ட்ரம்ப் ஆவார்.

டர்ம்பின் சவுதி அரேபிய பயணம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "ட்ரம்ப் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் சனிக்கிழமை சவுதி சல்மான் மற்றும் முக்கிய உறுப்பினர்களை சந்திக்கிறார். மேலும் இரண்டு நாள் நடைபெறும் கூட்டங்களில் சவுதி அரேபியாவின் இஸ்லாமிய தலைவர்களை சந்திக்கிறார். அச்சந்திப்புகளில் முக்கியமாக ஐஎஸ் இயக்கம் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளை எதிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அதன்பிறகு ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் வாடிகனுக்கு செல்ல இருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா பயணம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் கூறும்போது, "அமெரிக்காவுக்கு முதலுரிமை அளிப்பது என்பது அமெரிக்காவை தனிமைப்படுத்துவதில்லை என்பதை ட்ரம்ப் நன்கு உணர்ந்துள்ளார்" என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முஸ்லிம்களுக்கு எதிரான டர்ம்ப் பேச்சுகள் இஸ்லாமிய நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியிருத்த நிலையில் ட்ரம்பின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT