உலகம்

வட கொரிய வீரர்களை எச்சரித்து தென் கொரியா துப்பாக்கிச் சூடு: எல்லையில் நுழைய முயன்றதாக குற்றச்சாட்டு

பிடிஐ

வட கொரியாவின் ரோந்துக் காவல் படையினரை எச்சரிக்கும் வகை யில் அவர்களை நோக்கி தென் கொரிய படையினர் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

வட கொரிய எல்லை ரோந்துப் படையைச் சேர்ந்த சுமார் 10 வீரர்கள், இருநாடுகள் இடையிலான அமைதிப் பிராந்தியத்தில் நுழைந்து தென் கொரிய எல்லையை நோக்கி நேற்று முன்னேறியுள்ளனர். இதையடுத்து அவர்களை நோக்கி தென் கொரியப் படையினர் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

பதில் தாக்குதல் இல்லை

இதுகுறித்து தென் கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “எங்கள் எச்சரிக் கையை தொடர்ந்து, வட கொரிய வீரர்கள் தங்கள் எல்லைக்குத் திரும்பினர். பதில் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை” என்றார். வட கொரியா – தென் கொரியா இடையிலான நில எல்லையிலும் கடல் எல்லையிலும் கடந்த சில மாதங்களாக அத்துமீறல்களும், சிறு அளவிலான மோதல்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தென் கொரிய எல்லையை நோக்கி வடகொரிய வீரர்கள் முன்னேறியது அந்நாட் டின் சமீபத்திய அத்து மீறல் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். “குரல் எச்சரிக்கைக்குப் பிறகு வடகொரிய வீரர்களை நோக்கி சுமார் 20 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினோம். இதையடுத்து அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT