பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ‘சர்வதேச யோகா தினம்' கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 130 நாடுகள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா.மன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் யோகாவின் பயன்களைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும், அவர் ‘சர்வதேச யோகா தினம்' ஒன்றைத் தனியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து இந்தியா தற்போது வரைவுத் தீர்மானம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வரைவுத் தீர்மானத்துக்கு சுமார் 130 நாடுகள் தங்களின் ஆதரவை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வரைவுத் தீர்மானம் வரும் டிசம்பர் 10ம் தேதி பொதுக் கூட்டத்தின்போது நிறைவேற்றப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ம் தேதியை ‘சர்வதேச யோகா தினமாக' கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.