பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் சவால் விட்டு தோல்வி அடைந்ததால், தான் எழுதிய புத்தகத்தையே அதன் ஆசிரியர் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தெரசா மே போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் ஜெரிமி கார்பின் போட்டியிட்டார்.
இந்நிலையில், பேராசிரியரும், ‘ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் ஏன் வாக்களித்தது’ என்ற தலைப்பில் பிரக்ஸிட் தொடர்பாக புத்தகம் எழுதியவருமான மேத்யூ குட்வின் என்பவர் ட்விட்டரில் ஒரு சவால் விடுத்தார்.
கடந்த மே மாதம் 28-ம் தேதி ட்விட்டரில் அவர் வெளியிட்ட சவாலில், ‘ஜெரிமி கார்பின் தலைமையில் தொழிலாளர் கட்சி 38 சதவீத வாக்குகளை பெற்றால், நான் எழுதிய பிரக்ஸிட் புத்தகத்தை சந்தோஷமாக தின்பேன்’ என்று கூறினார். மேலும், தேர்தலில் தொழிலாளர் கட்சி 5 சதவீத வாக்குகள்தான் பெறும் என்று மேத்யூ கணித்திருந்தார்.
ஜெரிமி கார்பினுக்கு தொழிலாளர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் தேர்தலில் அந்த கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று மேத்யூ குட்வின் எதிர்பார்த்தார்.
ஆனால், தேர்தலில் தொழி லாளர் கட்சி எதிர்பார்த்ததைவிட ஜெரிமி கார்பின் தலைமையில் 40 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து, ‘‘நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஸ்கை நியூஸ் சேனலில் மாலை 4.30 மணிக்கு என்னுடைய புத்தகத்தை தின்பேன்’ என்று மேத்யூ அறிவித்தார்.
அதன்படி, மேத்யூவை தனது நிகழ்ச்சிக்கு ஸ்கை நியூஸ் சேனல் அழைத்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மேத்யூவுக்கு, புத்தகத்தை தின்பது குறித்து நினைவூட்டப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட மேத்யூ, தனது பிரிக்ஸிட் புத்தகத்தின் சில பக்கங்களைக் கிழித்து தின்றார். அந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
‘‘சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவன் நான். எனவே, சொன்னபடி இங்கு உட்கார்ந்து புத்தகத்தை தின்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை (ஒளிபரப்பு செய்வது) பாருங்கள்’’ என்று தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறினார்.
பிரிக்ஸிட் புத்தகம் 272 பக்கங்களைக் கொண்டது. அத்தனை பக்கங்களையும் ஆசிரியர் மேத்யூ தின்றாரா என்பது தெரியவில்லை.