வடகொரியாவின் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்கா அனுப்பி வைத்த ஏவுகணை தடுப்பு சாதனம் தென்கொரியாவுக்கு சென்றடைந்தது.
வடகொரியா 6-வது அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அதன்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவிர அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர்க் கப்பல் தலைமையில் ஏராளமான சிறிய ரக போர்க் கப்பல்கள் தென்கொரியாவில் குவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ் மிக்ஸிகனும் தென்கொரியாவின் பூசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்தது.
அதேசமயம் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் வோன்சன் எல்லைப் பகுதியில் வடகொரியா நேற்று பேர் ஒத்திகையில் ஈடுபட்டது. தனது ராணுவத்தின் 85-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலைச் சமாளிக்க கூடிய ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென்கொரியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது.
இந்த சாதனம் நேற்று தென்கொரியாவுக்கு வந்தடைந் தது. இதுகுறித்து தென்கொரிய ராணுவ அமைச்சக அதிகாரி கூறும்போது, ‘‘அமெரிக்கா அனுப்பியுள்ள இந்த ஏவுகணை தடுப்பு சாதனம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிலை நிறுத்தப்படும்’’ என தெரிவித்தார்.
இந்த ஏவுகணை தடுப்பு சாதனம், குறுகிய மற்றும் நடுத்தர வகையைச் சேர்ந்த எந்தவொரு ஏவுகணையையும் இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் பெற்றது.