உலகம்

ஆண்டுதோறும் ரூ.49,200 கோடியை குடித்து அழிக்கும் உலக கோடீஸ்வரர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

செய்திப்பிரிவு

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் ஆண்டுதோறும் மதுபானம் குடிப்பதற்கு மட்டும் ரூ.49 ஆயிரத்து 200 கோடியை செலவிடுகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெல்த் எக்ஸ், யூபிஎஸ் வேர்ல்ட் அல்ட்ரா வெல்த் நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் எந்த வகையில் தங்கள் பணத்தை அதிகம் செலவிடுகிறார்கள் என்று ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் இன்பச் சுற்றுலா, ஹோட்டல்களில் தங்கி ஓய்வெடுப்பதற்கான செலவு முதலிடத்தில் உள்ளது. இதற்காக 2.76 லட்சம் கோடியை உலக கோடீஸ்வரர்கள் செலவிடுகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக சொகுசு கார்களை வாங்க அதிக தொகை (2.46 லட்சம் கோடி) செலவிடப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக ஓவியம் உள்ளிட்ட கலைப் பொருள்களை வாங்குவது, நகைகள், கைக்கடிகாரம், பிரத்யேக ஹெலிகாப்டர், சொகுசு படகு, உடைகள், அலங்கார பொருள்கள், வீடு ஆகியவற்றை வாங்க அதிகம் செலவிடப் படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் மதுபான செலவு உள்ளது. ஆண்டுதோறும் ரூ.49,200 கோடி ரூபாயை மது விருந்திலும், மதுபான விடுதியிலும், வீட்டில் உள்ள பார்களுக்கு மதுபானம் வாங்குவதிலும் உலக பெரும் கோடீஸ்வரர்கள் செலவிடுகின்றனர்.

2014-ம் ஆண்டில் உலக மதுபான நிறுவனங்களின் விற்பனை ரூ.61.5 லட்சம் கோடியாக உயரும் என்று தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மதுபான விற்பனை சர்வதேச அளவில் 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஆடம்பர பொருள்கள் விற்பனையில் 19 சதவீதம் குறிப்பிட்ட சில பெரும் கோடீஸ்வரர்களை நம்பியே நடக்கிறது. கடந்த ஆண்டு இது 17 சதவீதமாக இருந்தது.

பெரும் கோடீஸ்வர்கள் பட்டியலில் உள்ள 185 கோடிக்கு மேல் நிகர சொத்து மதிப்பு உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இப்போது அதிகரித்துள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் பாதி பேர் மட்டும்தான் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வது, நற்காரியங்களுக்கு நன்கொடை அளிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக ரூ. 6 கோடியை மட்டும் தான் தர்மம் செய்கின்றனர்.

SCROLL FOR NEXT