தெற்கு சூடான் இப்போது கடு மையான பஞ்சத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக் கிறது. மேலும் நைஜீரியா, சோமாலியா, ஏமன் ஆகிய மூன்று நாடுகளிலும் இதே நிலைதான். இந்த 4 நாடுகளிலும் சுமார் 2 கோடி பேர் போதிய உணவின்றி விரைவில் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என்கிறது பஞ்சம் குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் ஓர் வலைப்பின்னல்.
‘வானம் பொய்த்துவிட்டது’ என்ற ஒரு வாக்கியத்தை, இந்தப் பஞ்சத்துக்குக் காரணமாகக் கூறிவிட்டு யாரும் நகர்ந்துவிட முடியாது. இந்தப் பஞ்சத்தின் பெரும் பகுதி மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். அதாவது செயற்கைப் பஞ்சம்!
உலகின் மிகப் புதிய நாடு தெற்கு சூடான். ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்டது. உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடு களில் ஒன்று. 2011-ல் சூடானிலிருந்து பிரிந்தது இந்த நாடு.
தெற்கு சூடான் கலவரங்களால் சூழப்பட்டிருக்கிறது. எங்கு பார்த் தாலும் அரசுக்கு எதிராக போராட் டங்கள். நியாயமான காரணங்கள், நியாயமற்ற காரணங்கள் ஆகிய இரண்டுக்காகவும் புரட்சி வெடித்துக் கொண்டிருக்கின்றன. பல உள்ளூர்வாசிகள் இந்தப் புரட்சி இயக்கங்களில் சேர்ந்து கொள்கிறார்கள்.
தெற்கு சூடான் இனவாரியாக பிளவுபட்டுக் கிடக்கிறது. இதன் காரணமாக சிறு கலவரங்களும் விரைவில் பெரிய பரிணாமத்தை எட்டுகின்றன. விவசாயிகள் போராளிகள் ஆகிறார்கள். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
போராளிகள் ஆகாத விவசாயி களும், கலவரங்கள் காரணமாக விவசாயம் செய்ய முன்வருவ தில்லை. இதனால் உணவுப் பஞ்சம் பரவுகிறது.
போராட்டக் குழுக்கள் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது. எனவே போராளிகள் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார்கள். இவர் களால் பணிக்குச் சென்று ஊதியம் பெற முடியாத சூழல். காடுகளில் தலைமறைவாக இருக்கிறார்கள். இதனால் அப்பாவி மக்கள் உணவின்றி வாடுகிறார்கள்.
வரும் ஜூலை மாதத்துக்குள் நாலு பில்லியன் டாலர் (ரூ.26,500 கோடி) மதிப்புள்ள உணவுப் பொருட் கள் தெற்கு சூடானுக்கு அனுப்பி வைக்காவிட்டால் பட்டினிச் சாவுகள் மிக அதிகளவில் நிகழும் என்கிறது ஐ.நா. அறிக்கை.
இந்தத் தொகையைத் திரட்டு வது முடியாத காரியமா? இல்லை. ஆனால் இந்த நிதியை அல்லது அதற்கான உணவுப் பொருட்களைப் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடப்பவர் களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் முடியாத காரியமாக இருக்கிறது.
எந்த உதவி வந்து சேர்ந்தாலும் பலவித விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் (17 விண்ணப்பங்கள் என்கிறது ஒரு ஏஜென்ஸி). பலவித உறுதிமொழி களை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டாலும்கூட தெற்கு சூடான் அரசு இதுபோன்ற நிதி உதவிகளை அவ்வப்போது ஏற்க மறுக்கிறது. சொந்த நாட்டு மக்களின் பசி தீர்வதை அரசு விரும்பவில்லையா என்று திகைக்க வேண்டாம். இதன் பின்னணி வேறு.
இந்த உணவுப் பொருட்கள் போராளிகளை அடைந்து விட்டால், உதவிகளை ஏற்கிறோம் என்ற பெயரில் எதிர் சக்திகளை ஊக்குவித்துவிடக் கூடாது என்கிற பதற்றம் தெற்கு சூடான் அரசுக்கு. அவர்கள் உணவுப் பொருட்களை விற்று ஆயுதங்களைக் குவித்தால்?
ஆக குழந்தைகள் பட்டினியால் இறப்பதை அரசு தடுக்க நினைக் கிறது. அதெநேரம் ‘எதிரிகள்’ பலம் பெற்றுவிடக் கூடாது என்பதில் அரசு மிகவும் விழிப்புடன் செயல்படுகிறது.
தின்கா, நூயெர் ஆகிய இரு இனத்தவர்களும் வலிமை வாய்ந்த வர்களாக உள்ளனர். அதேநேரம் இவர்களுக்குள் பகைமை உணர்வு மேலோங்கி நிற்கிறது. இதனால் தேசமே இன அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. ராணுவமேகூட இந்த இனங்களின் அடிப்படையில் பிளவுபட்டுக் கிடக்கிறது என்றால் வேறென்ன சொல்ல?
சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இருதரப்பினரும் சென்ற மே மாதத்தில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர். ஆனாலும் அமைதி திரும்பவில்லை. இதனால் பல லட்சக்கணக்கானவர்கள் தெற்கு சூடானிலிருந்து வெளியேறி விட்டார்கள்.
எனவே, நிதி உதவியையோ உணவுப் பொருட்களையோ வழங் கினால் மட்டுமே தெற்கு சூடான் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அரசியல் ரீதியாகவும் அங்கு தீர்வு தேவைப்படுகிறது. இதற்கு சில நாடுகள் உதவ வேண்டும். சில நாடுகள் விலகியிருக்க வேண்டும். அப்போதுதான் தொலைநோக்குத் தீர்வு என்பது ஓரளவாவது கிடைக்கும்.