சிரியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க வகை செய்யும் புதிய ஆணையை பிறப்பிக்க அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ஆணையை அதிபர் ட்ரம்ப் அண்மையில் பிறப்பித்தார்.
இந்த தடையை சியாட்டிலில் உள்ள நீதிமன்றம் நீக்கியது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய ஆணையை பிறப்பிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியபோது, நீதிமன்ற வழக்கில் அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அதை தவிர வேறு சில வழிகளும் உள்ளன. புதிதாக ஓர் தடையாணையை பிறப்பிக்கலாம். சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.
வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை புதிய ஆணை வெளியிடப்படலாம் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் ட்ரம்ப் அகதிகளை ஏற்க மறுப்பதால் கனடாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிச் செல்வோர் கனடாவில் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
‘சுமார் 40 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொள்வோம், அகதிகளின் நலனுக்காக புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார்.