உலகம்

கேமரூன் இந்தியா வருவதை ஒட்டி புதிய விசா முறையைக் கைவிட்டது பிரிட்டன்

செய்திப்பிரிவு

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிணைத்தொகை செலுத்தி விசா பெறும் புதிய நடைமுறையை பிரிட்டன் அரசு கைவிட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் இந்திய வருகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நைஜீரியா, கானா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அந்த நாடுகளுக்கு மட்டும் பிணைத்தொகை செலுத்தி விசா பெறும் நடைமுறை நவம்பரில் அறிமுகம் ஆகும் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது.

இதன்படி சுமார் ரூ.3 லட்சம் பிணைத்தொகை செலுத்தி 6 மாதத்துக்கான விசா பெற்றுக் கொள்ள வேண்டும். 6 மாதங்களுக்கு மேல் பிரிட்டனில் தங்கினால் அந்தத் தொகையை பிரிட்டிஷ் அரசு திருப்பித் தராமல் அபராதமாக எடுத்துக் கொள்ளும். இதற்கு இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வரும் 14-ம் தேதி இந்தியா வருகிறார். இதனிடையே புதிய விசா முறையை அமல்படுத்தப்படாது என்று அந்த நாட்டின் உள்துறை ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரிட்டிஷ் பிரதமரின் இந்திய வருகையை முன்னிட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT