பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியுடன் தொடர்பில் உள்ளோம் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
நவம்பர் 15, 16-ல் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கேமரூன் பங்கேற்க உள்ளார். அங்கு செல்லும் வழி யில் நவம்பர் 14-ம் தேதி டெல்லி வரும் அவர் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சிக்கு லண்டனில் அவர் பேட்டி யளித்தார். அப்போது, டெல்லி வரும்போது நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவீர்களா என்று கேமரூனிடம் கேள்வி எழுப்பப்பட ்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
இந்தப் பயணத்தில் மோடியை சந்திக்கும் திட்டம் இல்லை. பிரிட்டன் ஒரு ஜனநாயக நாடு. இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். சில விவகாரங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லையெனில், அவை குறித்து வெளிப்படையாகப் பேச்சு நடத்துவோம் என்றார்.
குஜராத் கலவரத்துக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் நரேந்திர மோடியை புறக்கணித்து வந்தன. அந்த நாடுகள் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி மோடியோடு இணக்கமான உறவை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூகோ ஸ்வைர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடியை சில மாதங்களுக்கு முன் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
புதிய விசா நடைமுறை
புதிய விசா நடைமுறை குறித்த கேள்விக்கு டேவிட் கேமரூன் அளித்த பதில்:
பிணைத்தொகை செலுத்தி விசா பெறும் புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். இந்தத் திட்டம் இந்தியாவை குறிவைத்து வரையறுக்கப்படவில்லை.
இந்தியர்கள் பிரிட்டனுக்கு வர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். பிரிட்டனில் கல்வி பயில வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையிலும் நாங்கள் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.