ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக், தான் ஒரு தன்பாலின உறவாளர் என்று ஒப்புதல் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, ரஷ்யாவில் அமைக்கப்பட்ட 'ஆப்பிள் ஐ- ஃபோன்' நினைவு சின்னம் நீக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பெர்க்கில் மிக பிரமாண்டமாக 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த 'ஆப்பிள் ஐ-போன்' வடிவ ஸ்டீவ் ஜாப்ஸுக்கான நினைவு சின்னம் அந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தான் ஒரு தன்பாலின உறவாளர் என்று பகிரங்கமாக ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சி.இ.ஓ. சமீபத்தில் வெளியிட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரம் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நகரமாக அந்த நாட்டில் திகழ்கிறது. அங்கு உள்ள புனித பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் 'ஆப்பிள்' நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்கு பின்னர், அவரது நினைவாக மிக பிரமாண்டமான 'ஆப்பிள் ஐ-போன்' நினைவு சின்னம் அங்கு உள்ள தொழில்நுட்ப வளாகம் ஒன்றில் கடந்த 2013-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் டிம் குக்கின் தன்பாலின உறவாளர் ஒப்புதல் பேச்சு இளைஞர்களை வழிதவறி நடக்க செய்திடும் என்பதால் 'ஆப்பிள்' நினைவு சின்னம் அங்கிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவு சின்னம் நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்க 'ஆப்பிள்' நிறுவனம் மறுத்துவிட்டது.