உலகம்

குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக புதிய ஆதாரம்: பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த குல்பூஷன் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஈரானில் துறைமுக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை இந்திய உளவாளி என குற்றம் சாட்டி பாகிஸ்தான் உளவுத் துறை கைது செய்தது. அவர் மீதான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக புதிய ஆதாரத்தை உளவுத் துறை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் அட்டர்னி ஜெனரல் அஸ்தர் அசாஃப் டான் செய்தி தொலைக்காட்சியிடம் கூறும்போது, "குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக புதிய ஆதாரம் ஒன்று பாகிஸ்தானிடம் கிடைத்துள்ளது. இந்த ஆதாரம் சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT