அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்ற நிலையில் மாற்றம் இல்லை என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
48 உறுப்பினர்களைக் கொண்ட என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர கடந்த ஆண்டு இந்தியா விருப்பம் தெரிவித்தது. இதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதர வும் தேவை. இதில் அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியாவை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்தன. எனினும், சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தியா வில் கோரிக்கை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும் போது, “என்எஸ்ஜில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகிறது. ட்ரம்ப் அதிபரானபோதும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. இந்தியாவை என்எஸ்ஜியில் சேர்ப்பது தொடர்பாக பிற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.
எனினும், இந்த வாரம் சீனா வுக்கு பயணம் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்டன், இந்த விவகாரத்தை எழுப்புவாரா என்பது தெளிவாக தெரியவில்லை.