இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்களுக்குள் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட தங்களுக்குள் நிலவும் பிரச்சனைகளை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் சுமுக நிலைக்கு கொண்டு வர முயல வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் முன்னேடுப்பதன் மூலம்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்ற நிலை குறைய வாய்ப்புண்டு.
இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றுதான் அமெரிக்கா விரும்புகிறது. காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளிடையே நிலவும் வெறுப்பு பேச்சுகள் மூலம் எந்த தீர்வும் எட்டப்படாது. அதே சமயத்தில் தீவிரவாத செயல்களை கண்டிக்கும் பேச்சுகளை அமெரிக்கா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் தீவிரவாத அமைப்புகளை அழிக்கும் இலக்கை அடைய முடியும்” என்றார்.
கடந்த சில மாதங்களாக காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.