உலகம்

நிபந்தனை விதிக்காமல் பட்ஜெட்டை நிறைவேற்றுங்கள் - ஒபாமா கோரிக்கை

செய்திப்பிரிவு

புதிய பட்ஜெட்டுக்கு அரசியல் நோக்கத்துடன் கூடிய நிபந்தனைகள் எதையும் விதிக்காமல் பிரதிநிதிகள் அவை ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அவர் கூறியதாவது:

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையிலிருந்து விடுபட குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் அவை மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரவேண்டும். அதற்காக நிபந்தனை எதையும் அந்த கட்சி விதிக்கக் கூடாது.

பட்ஜெட் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் கொடுக்க நடவடிக்கை எடுங்கள். கேலிக் கூத்துககு முடிவு கண்டாக வேண்டும்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையும் கொடுக்க முடியாத நிலை உருவானால் நம் நாடு மீதான நம்பிக்கையே போய்விடும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, வேலை வாய்ப்பை உருவாக்க, நிதி நிலைமையை மேம்படுத்த, ஜனநாயக கட்சி, குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பம்தான். ஆனால், மருத்துவ சிகிச்சைக்காக பெருமளவு செலவு செய்யும் பொதுமக்களின் நலனுக்காக நான் கொண்டு வந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரும்பாததால் கடந்த செவ்வாய்க்கிழமை அரசை முடக்கி விட்டனர் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள். இதனால் பாதிக்கப்பட்ட பல அமெரிக்கர்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு பட்ஜெட்டை நிறைவேற்றுவதுதான், செலவு செய்ய நிதியை அனுமதியுங்கள். அதன் மூலம் நிர்வாக முடக்கம் முடிவுக்கு வரும் என்றார் ஒபாமா.

SCROLL FOR NEXT