பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் துயரம்: 10 குழந்தைகள் பலி, 200 பேர் காயம், 50 பேரின் நிலைமை கவலைக்கிடம்
பிரான்ஸின் நீஸ் நகரில் தேசிய தின கொண்டாட்டத்தின்போது கனரக லாரியை அதிவேகமாக ஓட்டி வந்த ஐ.எஸ். தீவிரவாதி மக்கள் கூட்டத்தில் மோதினார். இதில் 10 குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தனர்.
பிரான்ஸின் 2-வது மிகப்பெரிய நகரம் நீஸ். கடற்கரை நகரான இது அந்த நாட்டின் தென்கிழக்கில் உள்ளது. பிரான்ஸ் முழுவதும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) பஸ்டீல் தினம் என்று அழைக்கப்படும் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நீஸ் நகர கடற்கரையில் இரவில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கண்டுகளிக்க ஆயிரக்கணக் கானோர் கடற்கரை பகுதியில் திரண்டிருந்தனர். இதனால் கடற்கரையை ஒட்டிய சாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது 25 டன் எடை கொண்ட வெள்ளை நிற கனரக லாரி அதிவேகமாக மக்கள் கூட்டத்தில் புகுந்தது. சுமார் 2 கி.மீ. தொலைவு நிற்காமல் சென்ற அந்த லாரி சாலையில் குழுமியிருந்தவர்களை இடித்துத் தள்ளியது. மக்களை நசுக்கியபடியே லாரி சென்றதால் உடல்கள் தூக்கி வீசப்பட்டன.
இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டபடி லாரியை விரட்டிச் சென்றனர். போலீஸாரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் லாரியை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கி கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அப்போது ஒரு பெண் போலீஸ் அதிகாரி, லாரி டிரைவரை சுட்டு வீழ்த்தினார்.
தீவிரவாதி ஓட்டிய லாரி மோதியதில் 10 குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பிரான்ஸுக்கு சுற்றுலா வந்த 2 அமெரிக்கர்களும் தாக்கு தலில் உயிரிழந்தனர். உக்ரைன், ஆர்மினியா நாடுகளைச் சேர்ந்த வர்களும் தாக்குதலில் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதி
மக்கள் கூட்டத்தில் லாரியை மோதிய டிரைவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது (31) என்பது தெரியவந்துள்ளது. துனிசியாவை பூர்வீகமாகக் கொண்ட அவர் நீஸ் நகரில் வசித்து வந்துள்ளார். அவர் மீது உள்ளூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.
நீஸ் நகரின் வடக்குப் பகுதி யில் தனியாக வசித்த முகமது சொந்தமாக வேன் ஓட்டி வந்துள் ளார். அக்கம்பக்கத்தினரிடம் அவர் அதிகம் பேசியதில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனரக லாரியை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த லாரி மூலம்தான் அவர் கொலை வெறி தாக்குதலை நடத்தியிருக் கிறார்.
3 நாட்கள் துக்கம்
தாக்குதல் குறித்து பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே கூறியதாவது:
பிரான்ஸ் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் தீவிரவாதத்தை நாம் உறுதியுடன் எதிர்கொள்வோம். சிரியா, இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப் படும்.
பிரான்ஸ் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். தற்போது அமலில் உள்ள அவசர நிலை வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது. நீஸ் தாக்குதல் காரணமாக அவசர நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடைபெற்ற நீஸ் நகருக்கு அதிபர் ஹோலந்தே நேற்று நேரில் சென்று பார்வை யிட்டார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களில் தனிநபர் தாக்குதல்களை நடத்துமாறு ஐ.எஸ். அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தீவிரவாதி முகமது லாரியை மோதச் செய்து தாக்குதல் நடத்தியிருப்பதாக முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரி யவந்துள்ளது. எனினும் தாக்குதலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3-வது தாக்குதல்
பிரான்ஸில் கடந்த 2015 ஜனவரி 7-ம் தேதி சார்லி ஹேப்டே நாளிதழ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 2015 நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலை நகர் பாரீஸின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 7 தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர். இதில் 130 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தற்போது நீஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதி லாரியை மோதி தாக்குதல் நடத்தியுள்ளான். பிரான்ஸில் 18 மாதங்களில் மூன்று பெரிய தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்பு நிகழ்த்தியுள்ளது.