உலகம்

வடகொரியர்கள், மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற பரஸ்பரம் தடை: இரு நாடுகளும் பழிக்குப் பழி நடவடிக்கை

பிடிஐ

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்ணன் கிம் ஜாங் நம் மலேசிய விமான நிலையத்தில் விஷ மருந்து தெளித்து கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக மலேசிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடகொரியாவைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே ஒருவரை கைது செய்து விசாரித்த நிலையில், போதுமான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தால் மலேசியா, வடகொரியா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகொரியாவில் வசிக்கும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. மலேசியாவில் நடைபெறும் வழக்கு முடிந்து, அங்குள்ள வடகொரியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் என கூறி உள்ளது.

இதனிடையே, இதற்கு பழிவாங்கும் வகையில் கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற மலேசிய அரசு தடை விதித்துள்ளது.

எந்த நேரமும் போர் மூளும் வடகொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “போர் எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக 4 ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை நடத்தினோம். அவை துல்லியமாக இலக்கை தாக்கின” என கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT