மாலத்தீவு அதிபரை கொலை செய்ய முயன்றதாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்புக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த மாலத்தீவில் அரசியல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. முதல் முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது நசீத் அரசு கலைக்கப்பட்டது. அவர் தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மாலத்தீவு அதிபராக தற்போது அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார். துணை அதிபராக இருந்தவர் அகமது அதீப். யாமீனின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஆனால், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தததாக அதீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அதிபர் அப்துல்லா தனது மனைவியுடன் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது படகில் குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாமீன் உயிர்த் தப்பினார். மனைவி மற்றும் பாதுகாவலர்கள் 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். அதிபரை கொல்ல முயன்றதாக முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் (34) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படகில் குண்டு வெடித்தது குறித்து விசாரணை நடத்த எப்.பி.ஐ. அதிகாரிகள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் தீவிர ஆய்வு செய்து படகில் வெடிகுண்டு எதுவும் வெடிக்கவில்லை என்று கூறினர்.
எனினும் முன்னாள் துணை அதிபர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்தது. விசாரணையின்போது, பத்திரிகையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், அகமது அதீப்பை குற்றவாளி என்று நேற்று முன்தினம் அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதீப்பின் பாதுகாவலர்கள் 2 பேருக்கும் இந்த கொலை முயற்சியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.