சிரியாவில் கிளர்ச்சியாளர் பகுதியில் நடத்தப்பட்ட ரசாயன வாயு தாக்குதல் பின்னணியில் பஷார் அல் ஆசாத் இருப்பதாக பிரான்ஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் தரப்பில் கூறியிருப்பதாவது, சிரியாவில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ரசாயன வாயுத் தாக்குதலின் மாதிரிகள் சமீபத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனக் கலவையுடன் ஒத்துப்போகின்றன. இது தொடர்பாக ஆறு பக்கங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் அய்ரல்ட், "சிரிய ரசாயன வாயுத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ராசாயனக் கலவைகள் சிரிய நாட்டில் உள்ள ஆய்வகங்களில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தக் குற்றச் செயல்களில் பின்னால் உள்ளவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.
சிரியாவில் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது ஏப்ரல் 4-ம் தேதி அரசுப் படை போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின. அப்போது ரசாயன வாயுக் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 11 குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். நச்சு வாயுவை சுவாசித்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை அங்கு முகாமிட்டு நேரடியாக போரில் ஈடுபட்டு வருகிறது. எனவே சிரியா அரசு படை போர் விமானம் அல்லது ரஷ்ய போர் விமானங்கள் ரசாயனக் குண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.
சிரியாவில் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த ரசாயனத் தாக்குதலை ஐ. நா மற்றும் உலக நாடுகள் பல தங்களது கண்டனங்களை தெரிவித்தன.
மேலும் இந்தத் தாக்குதலை சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தான் திட்டமிட்டு நடத்தியதாக இங்கிலாந்து, அமெரிக்கா கூறியிருந்தது.
இந்த நிலையில் ராசாயனத் தாக்குதலை சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தான் நிகழ்த்தியிருக்கிறார் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.