அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள விண்ணை முட்டும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், தென்னாப்பிரிக்க தேசியக் கொடியில் இருப்பது போன்ற வண்ணங்களில் காட்சியளிக்கிறது.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிற வெறிக்கு எதிராக போராடியவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடியில் உள்ள நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய வண்ண விளக்குகளைக் கொண்டு எம்பயர் கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நிற வெறியை எதிர்த்துப் போராடியதற்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மண்டேலா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 95-வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். இந்தத் தலைவருக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.